Skip to main content <%-- Protanopia filter --%> <%-- Deuteranopia filter --%> <%-- Tritanopia filter --%>

நகர்வாழ் மக்கள் பங்கேற்பு நிகழ்வுகள்: நம்ம சென்னையில் ஸ்மார்ட் பூங்காக்கள்

 

நகர வளர்ச்சி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான நிகழ்வுகளிலும் திட்டப்பணிகளிலும் நகர்வாழ் மக்களை உட்படுத்தி அவர்களின் ஆலோசனைகளைச் செவிமடுத்துச் செயல்படுவது உலகெங்கும் நிலவும் இயல்பான நடைமுறை. இதன் மூலம் மக்களுக்குத் தேவைப்படும் திட்டங்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப அவற்றைச் செயல்படுத்துவது திட்டப்பணிக் குழுவுக்கு எளிதாகிறது. பெருநகரத் தேவைகள் பெருகி வரும் இக்காலக்கட்டத்தின் நவீன மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் (CSCL), மற்றும் சென்னை பெருநகராட்சி (GCC) இணைந்து போக்குவரத்து மற்றும் வளர்ச்சி செயல்திட்டக் குழுமம் (ITDP) மற்றும் ஓப்பன் காரிடார் சென்னை போன்ற அமைப்புகளின் உதவியுடன் மக்களின் ஆலோசனைகளையும் கேட்டறிந்து நகர வளர்ச்சி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த முனைந்துள்ளது. இவ்வாறு செயல்படுவதன் மூலம் மக்களிடையே இச்செயல்பாடுகள் குறித்த ஈடுபாடும் அக்கறையும் ஏற்படுவது மட்டுமின்றி நாடெங்கும் உள்ள நகரங்கள் புதுப்பொலிவு பெற்றுத் திகழவும் ஏதுவாகிறது.

போக்குவரத்து மற்றும் வளர்ச்சிச் செயல்திட்டக் குழுமம், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் மாநகரப் போக்குவரத்து தொடர்பான முனைவுகளில், சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிட்டட்-உடன் இணைந்து செயலாற்றுகிறது. நகர்வாழ் மக்களுக்குத் தேவையான பணித்திட்டங்களை நிறைவேற்றுவதில் பெரிதும் உதவுவதுடன் மக்களின் ஆலோசனைகளையும் கேட்டறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. லாபநோக்கின்றி செயல்படும் நிறுவனமான ஓப்பன் காரிடார் சென்னை, தகவல் மையங்களை உருவாக்கி, நடேசன் பூங்காவைப் புதுப்பிக்கும் திட்டத்தில் ஒருங்கிணைந்து பணியாற்றியதுடன் மக்களிடமிருந்து அதற்கான ஒத்துழைப்பையும், அங்கீகாரத்தையும், பாராட்டுதல்களையும் பெற்றுத்தருவதிலும் உறுதுணையாய் செயலாற்றியது.

இத்தகையதோர் புதிய மாற்றம், மக்களிடையே பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு அவர்களில் பெரும்பாலானோர் முன்வந்து, மனமுவந்து பகிர்ந்துகொண்ட ஆலோசனைகளும் கருத்துப் பரிமாற்றங்களுமே சான்று. அதற்கேற்ற வகையில் திட்டங்களிலும் வடிவமைப்புகளும் உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. பூங்காவை வழக்கமாக பயன்படுத்துவோர் பூங்காவின் அமைப்பில் மேற்கொள்ளப்படவிருக்கும் மாற்றங்களைப் பற்றி அறிவதில் ஆர்வம் காட்டினர். அதன்மூலம் ஏற்படப்போகும் அனுபவங்களை எண்ணி, தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.

மேற்கொள்ளப்படவிருக்கும் மாற்றுப்பணிகள் குறித்த சில முக்கிய கருத்துப் பரிமாற்றங்கள்:

 

  • நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏதுவாக பூங்காவின் பரப்பளவில் மாற்றங்கள்: பூங்கா அமைந்துள்ள இடம் முழுவதும் இயற்கை சூழலில் பசுமையாக இருக்க வேண்டும் என்ற விரும்பிய நகர்வாழ் மக்கள், வாகனங்களை நிறுத்துவதற்காக பூங்காவின் விளிம்புகளில் இடம் ஒதுக்கும் திட்டத்திற்கு உடன்படவில்லை. மேலும், பூங்காவிற்கு வருகை தருபவர்களில் பெரும்பாலானவர்கள் அருகில் உள்ள இடங்களில் வசிப்பதால், வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கான  அவசியம் இல்லை என்றே கருதினார்கள்.  
  • குழந்தைகள் விளையாடும் பகுதிக்கான இடம் மற்றும் அளவு: தற்போது குழந்தைகள் விளையாடுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடம் காலையும் மாலையும் தகுந்த முறையில் பயன்படுத்தப்படுகிறது. அந்த இடம் போதுமானதாகவும் வசதியாகவும் இருப்பதால் அந்தப்பகுதியில் மாற்றம் ஏதும் தேவையில்லை என்று மக்கள் கருதுகிறார்கள்.
  • பசுமை விரிவாக்கம்: நிழல் தரும் பசுமையான மரங்கள் நடுவதை அனைவரும் விரும்புகிறார்கள். ஏற்கனவே உள்ள மரங்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாவண்ணம் சீரமைப்புப் பணிகள் நடைபெற வேண்டும் என்றும் மேலும் புதிய மரங்கள் நடுவது நன்மை என்றும் பலர் கருதுகின்றனர். பூங்காவில் ஆங்காங்கே உள்பாதை விரிவாக்கம் செய்யப்படுவது புதிய மரங்கள் நடும் செயலுக்கு பாதிப்பு  ஏற்படுத்தலாம் என்றும் சிலர் கருதுகின்றனர்.

 

மேற்கூறிய கருத்துகள் நேரடி ஆய்வு மற்றும் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது.  திட்டப்பணி குறித்த மக்கள் சந்திப்பு நடைபெற்ற நாட்களில் பூங்காவை பயன்படுத்தும் மக்களிடம் சென்னை பெருநகராட்சி மற்றும் சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிட்டட் அலுவலர்கள் (GCC மற்றும் CSCL) நேரடியாக உரையாடி குறைகளைக் கேட்டறிந்தனர். மக்களின் ஆலோசனைகளுக்கேற்ப வடிவமைப்பில் சில மாற்றங்களை மேற்கொள்ளவும் பெருநகராட்சி அலுவலர்கள் ஒப்புதல் தெரிவித்தனர். வாகனங்கள் நிறுத்துவதற்காக இடம் ஒதுக்குவதை மறுபரிசீலனை செய்யவும் ஒப்புக்கொண்டனர். 
 

 

சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணி முனைவுகள் சார்பாக இதுபோன்ற நேரடிக் கருத்தாய்வு நிகழ்ச்சிகள் முதன்முறையாக நகர்வாழ் மக்களிடம் மேற்கொள்ளப்படுகின்றன. இது குறித்த கூடுதல் விவரங்களை www.cscl.co.in என்ற இணையதளத்தில் காணலாம். 

திட்டப்பணி முனைவுகள் தொடர்பான சில புகைப்படங்களை இங்கே காணலாம்:

 

Natesan Park

Natesan Park

Natesan Park

Natesan Park

Natesan Park

Natesan Park